0

விடுதலைக் கேட்டால்… விலங்காப் போடுகிறாய்!

ஒரு புத்தகத்தை எரிப்பது என்பது அதை எழுதிய ஆசிரியனின் நினைவுகளை எரிப்பதற்குச் சமம். ஒரு புத்தகம் அல்ல பல்லாயிரம் புத்தகங்கள் தமிழர்களின் மூத்தோர் நினைவுகளை, அவர்களின் விலைமதிப்பில்லா அறிவுக் களஞ்சியங்களைச் சிங்கள இனவெறித் தூண்டலில் முப்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் எரித்தனர். முதலில் தமிழர்ப் புத்தகங்கள் எரிந்தன, பல ஆண்டுகள் கழித்து 2009-இல் தமிழர்களையும் எரித்தனர். புத்தகங்கள் எரிந்த யாழ்பாணப் பொது நூலகமும், தமிழர்கள் எரிந்த முள்ளிவாய்க்கால் கடற்கரையும், தமிழர்கள் நம் இதயங்களில் மிச்சமுள்ள நெருப்பாய்த் தகித்துக் கொண்டிருக்கின்றன.

என் வீடு பற்றி எரியும் போது தான் நான் தண்ணீரை ஊற்றி அணைப்பேன் என்று வாழாதிருக்கும் தமிழா! உன் வீடு பற்றி எரியும் பொழுது உன் வீட்டுக் கிணற்றில் நிச்சயம் நீரிருக்காது. உன் மொழிப் பேசுபவர்கள் உன் வளத்தைக் கொள்ளையடித்துக் கொழுப்பார்கள், உன்னையோ உன் மொழியையோ காப்பாற்ற மாட்டார்கள். நீ போராடக் களத்திற்குக் கூட வரவேண்டாம். உன் நிலை உணரு அது போதும்.

யாழ்ப்பாணத்தில் எரிந்த எங்கள் புத்தகங்களுக்கும், முள்ளிவாய்க்காலில் எரிந்த எங்கள் உறவுகளுக்கும் நீதிக் கிடைக்கவேண்டும். இந்த உலகிற்கு ஆலோசனைச் சொல்லும் படுபாதக நயவஞ்சகர்களின் முகத்திரைக் கிழிக்கப்படவேண்டும்.

விடுதலைக் கேட்டால்…
விலங்காப் போடுகிறாய்!
பகையே! விழித்திரு…
தமிழர் உணர்வு எழும்
இந்நேரம்
உன் விலங்குகளை
ஆயுதமாய் வைத்து
உன் வியாக்கியானங்களை
பொடிப்பொடியாக்குகிறோம்!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!