0

சோழர் விடியல் – அத்தியாயம் 2: மஞ்சள்புறாவும் அமைதிப்படையும்

வீதிவிடங்கன் களைப்பாகத் தெரிந்தான் இருந்தும் அவனது கவனம் மட்டும் சிதறவில்லை. மாலை மங்கிய அந்த நேரத்தில் தனது நாட்டுக்குள் ஆரவாரமின்றி உள்நுழைவது அவனுக்கு இனம் புரியாத ஒரு கலக்கத்தைக் கொடுத்தது, எதிரி நாட்டு வீரர்கள் என்று தன் நாட்டு வீரர்களே எந்த நேரமும் தாக்கும் அபாயம் இருந்ததை அவனால் எளிதாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை. அஃது ஒரு சிறிய படையாக இருந்தாலும் ஒவ்வொரு வீரர்களும் திடகாத்திரமாக ஆண்மைக்கே இலக்கணமாய் இருந்தார்கள், ஐந்நூறு வீரர்கள் சிறு சிறு அணிகளாகப் புரவி மேல் கம்பீரமாக அமர்ந்திருந்தாலும் எந்த வித சத்தமின்றிப் வீதிவிடங்கன் ஆணைக்கிணங்க முழங்கால் அளவு இருந்த கோடைக்கால ஆற்றுநீரை லாவகமாகக் கடந்தது அந்தச் சிறு படை.

மஞ்சத்தில் அமர்ந்து கண்களை மூடி சிந்தித்துக் கொண்டிருந்தான் எல்லாளன், அந்த நேரம் பார்த்து எல்லாளனின் மெய்காப்பாளன் உள்ளே வந்து பணிவுடன் வணங்கினான். அந்தச் சத்தத்தில் சிந்தனை அறுபட்ட எல்லாளன் என்ன விடயம் என்பது போல் தலையை அசைத்தான்.

சோழப்புறா – அத்தியாயம் 2 – மஞ்சள்புறாவும் அமைதிப்படையும் தொடர்பான அத்தியாயப் படம்

"அரசே, அமைச்சர் உபயகுலாமலன் வந்திருக்கிறார், தங்களை உடனே சந்திக்க வேண்டுமாம்" என்ற மெய்காப்பாளன் அரசனின் பதிலுக்காகக் காத்திருந்தான்.

"வரச் சொல்" என்ற எல்லாளன், மெய்காப்பாளன் பெருங்கிள்ளி செல்ல யத்தனிக்கும் போது, அவனை அருகில் அழைத்துக் காதில் ஏதோ கிசுகிசுத்தான், தலையை நன்றாக ஆட்டிய மெய்காப்பாளன் பெருங்கிள்ளி அறையை விட்டு வெளியேறினான். அவன் வெளியேறிய சில மணித்துளிகளில் அமைச்சர் உபயகுலாமலன் வேகவேகமாக அறைக்குள் வந்தார்.

அமைச்சர் உபயகுலாமலன் எல்லாளனை வணங்கினர் அவரது உடலில் ஒரு பதட்டமும் குழப்பமும் நிறைந்திருந்தது. "அரசே நமது கோட்டைக்கு வெகு அருகே ஒரு சிறுபடை வந்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது, எனது ஒற்றர்களில் ஒருவன் அவர்களுக்கு மிக நெருக்கத்தில் உளவு பார்க்க சென்றபோது சிக்கி விட்டான், நமது படைகளைத் தயாராக இருக்கச் சொல்லி நீங்கள் ஆணையிடவேண்டும்" என்று வார்த்தைகளைப் படுவேகமாக அடுக்கினார்.

"பொறுமை அமைச்சரே பொறுமை, ஒற்றர்களைக் கொல்லும் அளவிற்குத் தமிழர் மண்ணில் வீரம் சோரம் போகாது. என்னவென்று விசாரிப்போம்." என்றான், அந்த நேரம் பார்த்து அங்கே வந்த மெய்காப்பாளன் பெருங்கிள்ளி அரசனிடம் நீண்ட ஒரு குழல் போன்ற கருவியைப் பணிவாகக் கையளித்து விட்டு அறையிலியிருந்து வெளியேறினான்.

எல்லாளன் நிலைமையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்கின்ற நினைப்பில் அமைச்சர் உபயகுலாமலன் எதோ பேச யத்தனித்தார் அதற்குள் அவரைத் தடுத்த எல்லாளன், தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து வேகமாக எழுந்தான், சற்றுத் தூரத்தில் கிழக்குப் பக்கமாக வெண்ணிலவு ஊடுருவிக் கொண்டிருந்த பெரிய சாளரத்தை ஒட்டி நின்றான்.

"அமைச்சரே உங்கள் எச்சரிக்கை உணர்வு மட்டும் இந்தச் சோழ நாட்டை வழி நடத்தவில்லை என்றால் நாம் நிலையான ஓர் இடத்தை இந்த மண்ணில் பிடிக்கமுடியாமல் போயிருக்கும்" என்றவன் அவரை அருகே வருமாறு அழைத்தான்.

எல்லாளனுக்கு அருகில் வந்த உபயகுலாமலன் சாளரத்தின் மிகச் சரியான இடத்திலிருந்து கொண்டு தாம் எச்சரிக்கை செய்ய வந்த விடயத்தை அரசன் லாவகமாக இருந்த இடத்திலேயே அவதானித்துக் கொண்டிருப்பதைக் கண்டு பூரிப்படைந்ததார். சோழர் குலம் தமிழர் வரலாற்றில் மிகப் பெரிய சாதனைகளைச் செய்யப் போகிறது என்கின்ற நினைப்பு அவரது உடல் முழுக்க இன்பத்தைப் பாய்ச்சியது.

சாளரத்தின் வழியே வெகு தூரத்தில் அடர்ந்த கரிய மரங்களுக்கிடையில் தீப்பந்தங்களின் வெளிச்சம் காற்றின் அசைவுக்கு ஏற்றால் போல் ஆடிக் கொண்டிருந்தது. மெய்காப்பாளன் கொடுத்த குழல் போன்ற கருவியை இரண்டு முறை இழுத்து நீளமாக்கினான், அருகிலிருந்த அமைச்சர் உபயகுலாமலனிடம் நீட்டி இதன் மூலம் அங்கே நடக்கும் நிகழ்வுகளைக் கவனியுங்கள் அமைச்சரே என்றான்.

அரசன் கொடுத்த ஊதுகுழல் போன்ற கருவியை வாங்கிச் சாளரத்தின் வழியே நடப்பவற்றை ஓரிரு நிமிடங்கள் கவனித்த அமைச்சர் உபயகுலாமலன் உறைந்து போய் நின்று விட்டார்.

"அரசே தவறிழைத்துவிட்டேன் மன்னியுங்கள்" என்று பதறினார் அமைச்சர் உபயகுலாமலன். அவரது உடல் நடுக்கத்தைப் பார்த்த எல்லாளன் அவரை ஆசுவாசப்படுத்தினான்.

"அமைச்சரே, உங்கள் எச்சரிக்கை உணர்வைப் பற்றி சற்று முன்னர் தான் நான் சிலாகித்தேன் நினைவிருக்கிறதா? என்றவன் அவரது கையை பிடித்து உடல் நடுக்கத்தை குறையச் செய்தான்.

"இல்லை அரசே நான் பெரிய தவறு இழைத்துவிட்டேன் நம் இளவரசர் வீதிவிடங்கனைக் காப்பாற்றியாக வேண்டும்" என்றார் கண்கள் கலங்க.

"அதற்கு அவசியமே இல்லை அமைச்சரே, வீதிவிடங்கன் இந்த வயதில் காட்டும் அசாத்தியங்களை அரசனாக வியந்து பார்க்கிறேன் அதே சமயம் அவன் தந்தையாகப் பல சமயம் கலங்குகிறேன். இன்று நடந்து கொண்டிருக்கும் விடயத்தை நான் முன்கூட்டியே அனுமானித்து விட்டேன் அமைச்சரே" என்று புதிய அதிர்ச்சியை எல்லாளன் வார்த்தைகளில் கடத்தினான்.

அந்த நேரம் பார்த்து மெய்காப்பாளன் ஒருவன் அறைக்குள் நுழைந்தான்.

"அரசே, உங்கள் ரகசிய முத்திரை பதிந்த கணையாழியைக் காட்டி ஒருவர் உங்களைப் பார்க்க அனுமதி கேட்கிறார்" என்று பணிவான குரலில் கூறினான்.

எல்லாளன் அனுமதி அளிக்கும் வகையில் தலையை அசைக்க மெய்க்காவலன் வெளியேறிய சிறிது நிமிடங்களில் பார்ப்பவர்கள் பரிதாபப்படும் அளவிற்கு மெல்லிய உடல்வாகு கொண்ட ஒருவர் அறையில் நுழைந்து அரசருக்கும் அமைச்சருக்கும் வந்தனம் செய்தார்.

"அரசே, இளவரசரை கைது செய்துவிட்டோம் உங்களின் அடுத்த ஆணைக்கு காத்திருக்கிறோம்" எல்லாளன் பேசுவதற்கு முன் வேகமாய் இடைமறித்த அமைச்சர் உபயகுலாமலன். "என்ன இளவரசரை கைது செய்துவிட்டீர்களா, என்ன நடக்கிறது இங்கே" என்று ஆசுவாசப்பட்டர்.

மெல்லிய உடல்வாகு கொண்ட அந்த நபரோ அமைச்சர் உபயகுலாமலனை சற்றும் மதிக்கவில்லை "ஆமாம் கைது செய்துவிட்டோம்" என்று தீர்க்கமாக பதிலளித்தான்.

திமிராக அவனளித்த பதில் அமைச்சர் உபயகுலாமலனுக்கு பெரும் வெறுப்பை தந்தது அவர் கோபம் அதிகரிப்பதற்குள் எல்லாளன் தலையிட்டு இளவரசனை நாளை அரசவைக்கு கொண்டு வர உத்தரவிட்டான். அரசனின் ஆணையை கேட்டதும் அமைச்சர் உபயகுலாமலனுக்கு பித்து பிடிப்பது போல் இருந்தது, மெல்லிய உடல்வாகு கொண்ட அந்த நபரோ அமைச்சரை பார்த்து ஏளனமாக புன்சிரிப்பு சிந்திவிட்டு அரசனை வணங்கி விட்டு வெளியேறினான்.

"அமைச்சரே, அவன் பாண்டிய நாட்டை சேர்ந்தவன் உங்களை பற்றி நிச்சயம் அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அவனை பற்றி பிறகு ஒரு நாள் பேசுவோம், நாளை அரசவைக்கு வாருங்கள் உங்களுக்கு நான் இப்பொழுது சொல்வதை விட எல்லாம் தெளிவாய் விளங்கும்" என்றான்.

அமைச்சர் உபயகுலாமலனுக்கு எல்லாளன் மீது அளவற்ற அன்பும் நம்பிக்கையும் இருந்ததால் மேற்கொண்டு எதையும் அரசனிடம் இருந்து பெற முடியாது என்று குழப்ப முகத்துடன் அரசனை வணங்கிவிட்டு வெளியேறினார்.

அமைச்சரை குழப்பத்துடன் அனுப்பியது எல்லாளனுக்கு வருத்தமாய் இருந்தாலும் இது போன்று பல சமயங்கள் அவர் தனக்கு செய்ததை எண்ணி நமட்டு சிரிப்பு சிரித்தான். அதிகார நிலைகளில் தாய் நிலத்தை காக்க தமிழ் மறவர்கள் தங்களுக்குள் ஆடிக் கொள்ளும் இது போன்ற நிகழ்வுகள் தான் பெரும் அழிவுகளில் இருந்து தமிழ் நிலத்தை காத்தது.

வழக்கம் போல் இல்லாமல் அன்று அரசவையில் பொதுமக்கள் வெகுவாக தடுக்கப்பட்டு குறைந்த அளவே அனுமதிக்கப்பட்டிருந்தனர். எல்லாளன் அரசவையில் நுழைந்த போது பேரமைதி நிலவியது, அமைச்சர் உபயகுலாமலனின் கொடுத்த குழப்பமான வணக்கத்தை புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டு அரியணையில் கம்பீரமாக அமர்ந்தான்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!