0

மே 18: தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நாள்

மே 18 தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நாள் நமக்கு ஒரு தேதியாக மட்டும் இல்லை; அது தமிழர் வரலாற்றில் அழிக்க முடியாத துயர நினைவாகவும், நீதிக்கான பொறுப்பாகவும் நிற்கிறது. தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.

தமிழர் இனப்படுகொலை நாளான மே 18 ஒவ்வொரு ஆண்டும் தீராத வலியை நமக்கு கடத்திக்கொண்டிருக்கிறது. ஆண்டுகள் உருண்டோடினாலும் உலக நீதி அமைதியாகவே இருக்கிறது. நமது ரணங்களை வரலாற்றுப் பதிவுகளாக பதிவு செய்வதே, இந்த நீண்ட போராட்டத்தின் நியாயத்தையும் அதன் இலக்கையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று அவர்களை ஒருங்கிணிக்கும்.

மே 18 நினைவேந்தல் ஏன் முக்கியம்?

நினைவேந்தல் என்பது கடந்தகாலத்தை மட்டும் பார்க்கும் செயல் அல்ல. அது மறைக்கப்பட்ட உண்மைகளை நினைவில் வைத்திருக்கும் அரசியல், மனிதநேய, வரலாற்றுப் பொறுப்பு. ஒரு இனத்தின் வலி பதிவாகாமல் போகும் போது, அதன் நீதிக் கோரிக்கையும் மெதுவாக உலக நினைவிலிருந்து அகற்றப்படுகிறது.

மே 18 தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நாள்

ஆரம்பக் கட்டத்தில் இந்த நினைவேந்தல் நாளை கடைப்பிடிப்பதே பெரும் சவாலாக அமைந்திருந்தது. ஆனால் இன்று பல தமிழர் அமைப்புகள் தங்களால் முடிந்த அளவில் எல்லா இடங்களிலும் இந்த நினைவேந்தல் நாளை கடைப்பிடித்து, அடுத்த தலைமுறைக்கும் இதை கடத்துகின்றனர். தமிழ்நாடு அரசும் இந்த நாளை ஒரு முக்கிய நாளாக அறிவிக்கும் போது தான் அது எல்லாத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த தமிழர்களின் குரலாய் ஒலிக்கும்.

வரலாற்றுப் பதிவு அடுத்த தலைமுறைக்கான கடமை

மே 18 தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நாள் குறித்து எழுதுவது, பேசுவது, பகிர்வது அனைத்தும் வரலாற்று நினைவகத்தை காக்கும் முயற்சிகள். இன்று இளம் தலைமுறை இந்த நாளின் அர்த்தத்தை அறிந்துகொள்ள வேண்டும். துயரம், நீதி, உரிமை, தாயகம், மனிதநேயம் ஆகியவை ஒன்றோடொன்று எப்படி இணைக்கப்படுகின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

உலகத் தமிழர்கள் இந்த விடயத்தில் ஒற்றுமையாக குரல் கொடுப்போம். தூங்கிக்கொண்டிருக்கும் உலக நீதியைத் தட்டி எழுப்புவோம்.

தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்!

நினைவேந்தலில் பங்கேற்க

இந்த நினைவேந்தல் முயற்சியில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி பங்கேற்கலாம்: Light a candle in remembrance.

தமிழன் சங்கர் தளத்தில் இதுபோன்ற சமூக, வரலாறு, அரசியல் சார்ந்த தமிழ் கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்க கட்டுரை பக்கத்தையும் பார்க்கலாம்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!