0

குமரிக்குன்றம் – அத்தியாயம் 5: சொல்லப்பட்டதும் சொல்லாததும்

அது ஒரு நீண்ட இரவாக இருந்தது. காலை வெகு தாமதமாகவே புலர்ந்தது. பரிதி கூட யாரோ சமாதானப்படுத்தித் தான் கிழக்கில் எழுந்தது போல இருந்தது.

அரவான் கிராமத்தின் கூரைகளில் மெல்லிய காலைப் பனி புகைபோல் ஒட்டிக் கொண்டிருந்தது. தெருவோரம் இருந்த பூச்செடிகளில் தண்ணீர் நீர்த்திவலையாய் சொட்டிக் கொண்டிருந்தது. நேற்றிரவு வீசிய அந்த விசித்திரமான புயல், ஒரு துளி மழைக் கூட பொழியாமல் போயிருந்தது. ஆனால் காற்றில் ஏதோ ஒரு வித்தியாசமான வாசனை வீசியது. உலகமே மூச்சைப் பிடித்துக்கொண்டு நின்றது போல் ஒரு அச்சமூட்டும் அமைதி நிலவியது.

குமரிக்குன்றம் - அத்தியாயம் 5: சொல்லப்பட்டதும் சொல்லாததும்

எப்பொழுதும் தன் அம்மா எழுப்பும் போதே எழுந்திருக்கும் ஈமரன் அன்று அவள் எழுப்பும் முன்பே விழித்துக் கொண்டான்.

ஒரு கணம் அசையாமல் படுத்தபடியே இருந்தான். சன்னல் வெளியே எப்பொழுதும் கேட்கும் காற்றின் சத்தமில்லை, பறவைகளின் சத்தமும் இல்லை. தூரத்து ஆறும் கூட தன் வழக்கமான ஓசையின்றி உணர்வுகளை ஏமாற்றி நகர்வது போலத் தோன்றியது.

அந்த நொடி மீண்டும் அதை உணர ஆரம்பித்தான். நேற்றிரவு போலச் சுட்டெரிக்கும் தீயாக இல்லை — மிக மெல்லிய, ஆழமான வெப்பம். சாம்பலுக்குள் மறைந்து புகைக்கும் நெருப்புத் திவலைகள் போல.

அந்த வெப்பம் அவனுக்குள் ஒரே இடத்தில் இல்லை. மார்பிலும் கைகளிலும் அது நூலைப் போல் படர்ந்து பின்னப்பட்டிருந்தது. சில நாட்களாகவே அது இருந்தாலும் இப்போது தான் அது என்னவென்று உணரவைத்திருக்கிறது. படுக்கையின் மேல் தன் கையைப் புரட்டிப் பார்த்தான். அதில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆனால் விரல்களை மூடினபோது, ஏதோ ஒன்று மெதுவாகப் பதிலளித்தது — அந்த பதில் அவனுக்கு எந்தத் தடையும் இல்லை, எல்லாவற்றிற்கும் அவனுக்கு அனுமதி இருக்கிறது என்பது போல் இருந்தது. ஆனால் அவனுக்குத் தான் எதற்கு அனுமதி என்று ஒன்றும் புரியவில்லை.

அந்த நேரம் பார்த்து வாசல் கதவு திறந்தது. அவன் அம்மா அங்கே நின்றிருந்தாள், தலை முடியை அவசரமாகச் சுருட்டி கொண்டை போட்டிருந்தாள். அவனை கவலைப்படுத்தக் கூடாது என்பது மட்டும் அவள் கண்கள் வழியே கனிவாய் வழிய
“இவ்வளவு சீக்கிரமா முழுச்சுட்டியே?” என்றாள்.

“தூக்கம் வரலை.”

“நடக்குறதைப் பார்த்தா யாருக்குத் தான் தூக்கம் வரும்” அவள் குரலில் கவலை தெரிந்தது.

“வா… சூடா இதைக் குடி” என்று சுத்தமான பாலை அவனை நோக்கி நீட்டினாள்.

வெளியில், கிராமம் ஒரு காயத்தின் மேல் நடக்கிற மனிதன் போலவே ஒரு வித அச்சத்துடன் நாளைத் தொடங்கியது. ஆண்கள் சிறு சிறு குழுக்களாக நின்றனர்; யாராவது அந்தக் குழுவை நெருங்கினால் உடனே கலைந்தனர். பெண்கள் அரை வாக்கியங்களில் முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். வழக்கமாகச் சிறகடிக்கும் சிட்டுக் குருவிகளைப் போல ஓடிக் கொண்டிருக்கும் குழந்தைகள், சுவர்களுக்கும் வாசல்களுக்கும் அருகிலேயே ஒட்டிக் கொண்டு ஈமரன் இதுவரை காணாத அளவுக்கு அமைதியாக இருந்தனர்.

கால்நடைகளை மேய்க்கும் ஆயன், தன் கம்புடன் பாதையைத் தாண்டிச் சென்றான். வெயிலால் கருந்த அவனது முகத்தில் பரிதியின் கதிர்கள் மரங்களுக்கு இடையே புகுந்து கோடு கிழித்தது.

“என் ஆடுகள் வேலியை விட்டு வெளியே வர மாட்டேங்குது,” என்று முணுமுணுத்தான். ஆனால் யாரிடம் சொல்கிறான் என்றே தெரியவில்லை. “அவை எல்லாம் அந்தக் குன்றத்தையே பார்த்துகிட்டு இருக்குது.” என்று சற்றே சத்தமாக முடித்தான்.

“குன்றமா?” என்று ஒருவர் கேட்டார்.

“ஆமாம்,” என்றான் மண் தரையில் உட்கார்ந்தபடி, மீண்டும் அழுத்தம் திருத்தமாக
“குமரிக்குன்றம்,” என்றான்.

அந்தப் பெயர் கேட்டதும், ஈமரன் மார்புக்குள் இருந்த சுடர் அசைந்தது — மிகச் சிறிய அசைவு; ஆனால் தொண்டையில் இறுக்கத்தை கொடுத்தது. அவன் கண்ணைத் தாழ்த்திக் கொண்டு, அம்மா கொடுத்த பாலை மடக் மடக்கென்று குடிக்க ஆரம்பித்தான்.

ஈமரனின் அம்மா, உலகம் இயல்பாகத் தான் இருக்கிறது என்பது போன்ற போலி நம்பிக்கையுடன் அவளாகவே பேசிக் கொண்டிருந்தாள். தண்ணீர் எடுக்க வேண்டும்,
தானியம் அளக்க வேண்டும், துணி தைக்க வேண்டும் — சாதாரண வேலைகளால் தேவையற்ற எதையும் சிந்திக்கக் கூடாது என்று தனக்குள் ஒரு சுவர் எழுப்பிக் கொண்டிருந்தாள்.

ஈமரன் அவளுக்கு வீட்டு வேலைளில் உதவினான். பேசுவதை விட அதுவே எளிதாக இருந்தது. ஆனால் அவன் எங்கு நகர்ந்தாலும், அதே உணர்வு — அச்சமல்ல;
ஒரு எச்சரிக்கை உணர்வு. ஒட்டுமொத்த கிராமமே ஏதோ ஒரு செய்திக்குக் காத்திருப்பது போல் இருந்தது.

மதிய நேரம் வந்தது. தண்ணீர் பிடிக்கும் வாளியுடன் கிணற்றை நோக்கிச் சென்றான். பாதி வழியிலேயே, ஆதிரனைப் பார்த்தான்.

ஊருக்கு நடுவில் இருந்த கல்மேடை அருகில் நின்றிருந்தார் ஆதிரன். எந்தக் குளிரும் இல்லையென்றாலும், மேலங்கியை இறுக்கமாக மூடி இருந்தார். கிராம மக்கள் அவரை வேண்டா வெறுப்பாகப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றனர் — வேண்டாத விருந்தாளியாக இருந்தாலும் ஒரு குறியீடு போல அவர் அங்கே உலாவிக் கொண்டிருந்தார்.

“இன்று குமரிக்குன்றத்துக்குப் போகாதே,” என்று ஆதிரன் மெதுவாகச் சொன்னார்.

“ஏன்?” என்று ஈமரன் கேட்டான்.

“ஆதிக்கண் விழிக்கும் போது, மென்மையாக விழிக்காது,” என்றார் அவர்.
“அது உன்னைவிட நீண்ட காலமாக விழித்திருக்கிறது.”

“அது… என்னாலா?” என்று ஈமரன் கேட்டான்.

“ஒரே மனிதனால் எல்லாம் நடக்காது,” என்றார் அவர்.
“ஆனால் நீ இல்லை என்றும் சொல்ல முடியாது.” என்று சிறிதாகத் தலையை ஆட்டினார்.

ஈமரன் தொடர்ந்து நடந்தான்.

கிணற்றருகே, தண்ணீர் தொட்டிக்கருகில் ஒரு சிறுமி நின்றாள் — இளவி.
ஐந்து வயது; இளஞ்சிவப்பு முடி; எப்போதும் எங்காவது விழுந்து எழுந்திருப்பதால் காயமடைந்த முழங்கால்களோடு தான் அவளைப் பார்க்க முடியும்.

“என்ன பார்க்கிறாய்?” என்று மெதுவாகக் கேட்டான் ஈமரன்.

“முகம் சரியாக இல்லையே இந்தத் தண்ணீரில்” என்று இளவி கிசுகிசுத்தாள்.

ஈமரன் நீரைப் பார்த்தான். அவனுடைய பிரதிபலிப்பு அசைந்தது. அது இயல்பாய் இருந்தாலும் அந்த அசைவில் ஏதோ சரியில்லை. கண்கள் அதிக இருளடைந்து இருந்தது, வாயில் தெரிந்த முகக் கோடுகள் அவனை முதியவர் போல் காட்டியது.

மார்புக்குள் இருந்த சுடர் மெதுவாக ஒளிர்ந்தது. தண்ணீர் வாளி அசையாத போதும் தண்ணீரில் மீண்டும் அசைவு தெரிந்தது. ஒரு கணம், அவனது பிரதிபலிப்பின் பின்னால், அவனது தோளுக்குப் பின் ஒரு உருவம் தோன்றியது.

ஈமரன் திடுக்கிட்டு திரும்பினான். யாரும் இல்லை. இளவி பின்னோக்கி நகர்ந்து, ஒரு வார்த்தையும் சொல்லாமல் ஓடினாள்.

ஈமரன் அங்கே உறைந்து நின்றான்.

ஏதோ ஒரு நினைவு — அது அவனுடையதல்ல.

கருங்கல் தூண் மேல் வைக்கப்பட்ட ஒரு கை.
தூரத்திலிருந்து பேசும் ஒரு குளிர்ந்த குரல்.
மேலங்கி போர்த்திய உருவங்கள் வட்டமாக நின்றிருந்தன.
அவர்களில் ஒருவன் காலத்தையே துளைத்து அவனைப் பார்ப்பது போல் தன் தலையைத் திருப்பினான்.

இப்பொழுது அந்த நினைவு உடைந்தது. ஈமரன் தண்ணீர் வாளியின் பிடியை இறுக்கப் பிடித்தான். அவன் தண்ணீரை வீட்டுக்கு எடுத்துச் சென்றான். அம்மா வாளியைப் வாங்கி கீழே வைத்தாள்; அவனது கைகளின் நடுக்கத்தை கவனிக்கவில்லை.

ஊர் மத்தியில் இருந்த மைய மண்டபத்தில் இருந்து மணி ஒலித்தது — ஒரு முறை.
பிறகு இன்னொரு முறை.

கிராமத்து மூத்தோர் கூட்டம் கூடியது. மண்டபம் முழுக்க கிராமவாசிகள்.
மூத்தோர் மாயரன் முன்னே நின்றார்; நிமிர்ந்த தோற்றம்; தாடி ஒழுங்காக வெட்டப்பட்டு பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தார்.

“வானத்தை நாம் அனைவரும் பார்த்தோம்,” என்றார் அவர்.
“சிலர் அதை புயல் என்பார்கள். சிலர் எச்சரிக்கை என்பார்கள். என் கணிப்பு இது தான் — அச்சம் எந்த ஒரு மனிதனையும் மூடனாக்கும்.”

கிராமவாசிகளிடம் முணுமுணுப்பு எழுந்தது.

“நாம் வழக்கம் போல நமது வேலைகளைப் பார்ப்போம்,” என்றார் மாயரன்.
“வயல்களைப் பார்ப்போம். குழந்தைகளை கவனிப்போம். எந்த ஒரு கதைகளையும் நம்பி குன்றங்களை நோக்கி  ஓடாமல் நமது அன்றாட வேலைகளைப் பார்ப்போம்,” என்று ஆணித்தரமாக முடித்தார்.

அவரின் பார்வை ஈமரனைத் தொட்டது.
“குமரிக்குன்றம் மிகப் பழையது,” என்றார் அவர்.
“அதை அமைதியாக விடுவதே நல்லது. மௌனமாக நமது வேலையைப் பார்ப்பது தான் நம்முடைய பாதுகாப்பு.”

பின்புறத்தில் இருந்து ஒரு குரல் எழுந்தது. “பிரச்சனை நம்மைத் தேடி வந்தால் என்ன செய்வது?”

அவன் வேறு யாருமல்ல — மணியன் குயவன். எப்போதும் அமைதியானவன். அந்த நேரம் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை.

மாயரனின் உதடுகள் இறுகின. “அப்போது ஒன்றாக எதிர்கொள்வோம்.
ஆனால் ஆர்வத்தால் அதை நாமாக அழைப்பது முட்டாள்தனம்.”

ஈமரன் தன் கைகளைப் பார்த்தான். அவனது கையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஏதோ ஒன்று கேட்பதற்கு தயாரானது போல் ஒரு உணர்வு — அது பொறுமையாகக் காத்திருந்தது.

கிராமவாசிகள் கூடியிருந்த மண்டபச் சுவர்களுக்கு அப்பால், மரங்களுக்கு அப்பால், பாறைகள் பாதி மண்ணில் புதைந்திருக்கும் குமரிக்குன்றத்துக்கு அப்பால், அங்கே இருந்து ஒரு பதில் வந்தது.

அதில் வார்த்தைகள் இல்லை. உணர்வு வடிவத்தில் இருந்தது.

ஈமரன் தலையை உயர்த்தி குமரிக்குன்றத்தைப் பார்த்தான். அங்கு செல்ல முடிவு எடுக்கவில்லை.

ஆனால் இந்த நாள் முடிவதற்குள், எந்த எச்சரிக்கைகள் தடுத்தாலும், அதற்கு அருகே — மிக அருகில் — அவன் இருப்பான் என்பதை அமைதியான அச்சத்துடன் உணர்ந்தான்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!